யாழ்.சுன்னாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி
யாழ்ப்பாணம்(Jaffna) சுன்னாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்றையதினம்(3) சுன்னாகம் சந்தியில் இருந்து காங்கேசன்துறை செல்கின்ற பக்கம் 100 மீற்றர்கள் தூரத்தில், ஹையேஸ் வாகனம் ஒன்று, வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பெண்கள் சென்றுகொண்டிருந்தவேளை, முந்திச் செல்ல முயன்ற ஹையேஸ் வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த பெண்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சங்கானையைச் சேர்ந்த ஆனந்தன் சிவானந்தகௌரி (வயது 51) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.