கடன் நெருக்கடி... என்ன தீர்வு..? - கொரோனாகால யோசனைகள்!

கடன் நெருக்கடி... என்ன தீர்வு..? - கொரோனாகால யோசனைகள்!

கடன் வாங்கும்போது அதைத் திருப்பி அடைப்பது குறித்த திட்டமும் நம்மிடையே இருக்க வேண்டும்.

கொரோனா, உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. ஊரடங்கால் தொழில்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பல சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. பெருநிறுவனங்களும் ஆட்குறைப்பு, சம்பளப் பிடித்தம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உலகத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) ஓர் அறிக்கையில், `இந்த ஊரடங்கு காலத்தில் உலகெங்கும் 2.5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்’ என்னும் அதிர்ச்சித் தகவலைச் சொல்கிறது. தற்போது அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கக்கூடும் எனலாம்.

வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு ஆகியவற்றால் தனிமனிதப் பொருளாதார நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பளம் வாங்கும் காலத்தில் அதை அடிப்படையாகக்கொண்டு வீட்டுக் கடன், தனிநபர் கடன் ஆகிய கடனை வாங்கியிருப்பவர்கள் எதிர்பாராதவிதமாக முடங்கியிருக்கும் வருமான இழப்பால் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். சம்பளத்தை அடிப்படையாகக்கொண்டு பலரும் வீட்டுக் கடன் பெற்று வீடு வாங்கிவிட்டு, இ.எம்.ஐ செலுத்த இயலாமல் தவித்துவருகிறார்கள். `தாராளமாக வருமானம் வருகிறதே...’ என்ற எண்ணத்தில் பலரும் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிப் போட்டுவிட்டு, இப்போது தவணை செலுத்தத் திணறிவருகிறார்கள்.

அரசாங்கம் அளித்திருக்கும் ஆறு மாத கடனைத் திருப்பிச் செலுத்தும் சலுகைக்(Moratorium) காலமும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடையவிருக்கிறது. அடுத்த மாதத்திலிருந்து கட்டாயம் தவணை செலுத்த வேண்டிய நெருக்கடி உருவாகிவிடும்.

சம்பளக் குறைப்பு பெற்றவர்கள்கூட நிலைமையைச் சமாளிக்கலாம் என்றால், வேலை இழந்தவர்களின் நிலைமை மிகவும் மோசமானது. கடன் பிரச்னைகளைச் சமாளிக்க இவர்கள் என்ன செய்யலாம் என்று பொருளாதார ஆலோசகர் ரேணு மகேஸ்வரியிடம் கேட்டோம்.

“கொரோனா காலங்களில் என்றில்லை, மற்ற நேரங்களிலும் வேலை இழப்பு மற்றும் வருமானக் குறைவு என்பது பிரச்னைதான். மற்ற காலங்களில் என்றால் முயன்று மாற்று வேலை தேடிக்கொள்ள இயலும். ஆனால், இந்தக் காலகட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு என்பதும் சவாலானதே.

கடன் நெருக்கடி... என்ன தீர்வு..? - கொரோனாகால யோசனைகள்!

பொதுவாக, கடன் வாங்கும்போது அதைத் திருப்பி அடைப்பது குறித்த திட்டமும் நம்மிடையே இருக்க வேண்டும். திடீரென்று ஏற்படும் வேலை இழப்பு மற்றும் வருமானக் குறைவு குறித்தும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். ஆனால், இந்தப் பொருளாதார அடிப்படையைப் பெரும்பாலானவர்கள் பின்பற்றுவதில்லை.

நிறைய பேர் சம்பளத்தை நம்பி, வங்கிக் கடனில் வீடு வாங்குகிறார்கள். ‘வாடகை கட்டுவதற்கு பதிலாக இ.எம்.ஐ கட்டலாம்’ என்று அறிவுரை சொல்பவர்கள் பலரும் நம்மிடையே உண்டு. அது தவறு இல்லை. அதே நேரம், சொத்து வாங்குவதைப்போலவே சேமிப்பிலும் முறையான கவனம் செலுத்தியிருக்க வேண்டும். எப்போதும் ஆறு மாதங்களுக்குத் தேவைப்படும் பணத்தை வங்கிக் கணக்குகளில் சேமித்து வைத்திருக்க வேண்டும். தேவைக்கேற்ப இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் முறையாகப் பின்பற்றிப் பொருளாதாரத் திட்டத்தை வகுத்திருந்தால், இக்கட்டான காலகட்டத்தில் கடன் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அப்படியில்லாமல் சம்பளம் ஒன்றை மட்டும் நம்பி, சேமிப்பு என்று எதுவும் இல்லாமல் கடன் வாங்க இறங்குவது ஆபத்தானது.

வங்கியில் சேமிப்பாக, டெபாசிட்களாக பணம் இருக்கும்பட்சத்தில், அவற்றைப் பயன்படுத்தி உடனடிக் கடன் பிரச்னைகளைத் தீர்க்கலாம். வீட்டுப் பெண்களுக்கு நகைகள் வாங்கித் தந்திருந்தால், அவற்றையும் பணமாக்கி இந்தக் காலகட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். செலவுகளைக் குறைக்கும் வழியில் இறங்க வேண்டும். அவசியத் தேவைகளுக்கு மட்டுமே செலவு என்று தீர்மானித்து, பணச் செலவைக் குறைத்தால், அதுவும் ஒரு வருமானம்தான்.

கடன் நெருக்கடி... என்ன தீர்வு..? - கொரோனாகால யோசனைகள்!

இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் மீது கடன் வாங்கலாம். இந்தக் கடன், பர்சனல் லோன்களைவிட மிகக் குறைவான வட்டி விகிதத்தில் இருக்கும். நண்பர்கள், உறவினர்களிடமிருந்து வட்டியில்லாக் கடன் பெற்று நிலைமையைச் சமாளிக்கலாம். வேலை பார்ப்பவர்களுக்குக் கண்ணுக்குத் தெரியாமல் சேர்ந்திருக்கும் சேமிப்பு வைப்புநிதி. அவசரகாலச் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம். `தற்போது 75% வைப்புநிதியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. வங்கிக் கடன்களைப் பொறுத்தவரை, மறு சீரமைப்பு (Restructuring) செய்ய இயலுமா என்று பார்த்து, தெளிவான திட்டத்துடன் வங்கியை அணுகுவது நல்லது.

எல்லாவற்றையும்விட முக்கியமானது நம்பிக்கையை இழக்காமல் இருப்பது. `சீக்கிரம் இந்தச் சிக்கல்களிலிருந்து மீண்டுவிடுவோம்’ என்ற நம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம்’’ என்றார் ரேணு. `கடன்பட்டார் நெஞ்சம்போல...’ என்று கலங்கி நிற்க வேண்டாமே!