முல்லைத்தீவில் வைத்து மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட வட மாகாண ஆளுநர்

முல்லைத்தீவில் வைத்து மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட வட மாகாண ஆளுநர்

முல்லைத்தீவில் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளதோடு அதற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியேக முறை பின்பற்றப்படவுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மன்னார் பரிகாரக்கண்டல் அரச தமிழ் கலவன் பாடசாலையின் தொழில்நுட்பக் கட்டடத் தொகுதியை வட மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் நேற்று வைபவரீதியாகத் திறந்து வைத்தார்கள்.

அவர் அங்கு தெரிவித்துள்ளதாவது,

வட மாகாணம் ஒரு காலகட்டத்திலே கல்வில் தலை நிமிர்ந்து நின்றதொரு மாகாணமாகும். இந்த நாட்டிலுள்ள அனைவருமே கல்வியென்று சொன்னால் யாழ்ப்பாணமும் வட மாகாணமும் என்று சொல்லுமளவிற்கு இருந்தது.

மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தந்து கல்வி கற்பதை பாக்கியமாக கருதினார்கள். அந்நிலை மாறி இன்று க.பொ.த. சாதாரணப் பரீட்சைப் பெறுபேற்றில் 9ஆவது இடத்தில் வட மாகாணம் இருக்கின்றது.

வளப்பகிர்வைச் சரியாகப் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்பதில் வட மாகாண சபை மிக ஆழமாகச் சிந்தித்து செயலாற்றிக்கொண்டிருக்கின்றது.

இதன் ஒரு பகுதியாகத்தான் புதிய கட்டடங்களை வளங்கள் குறைந்த பாடசாலைகளுக்குப் பகிர்ந்தளித்துள்ளார்கள்.

பிரதமரின் வேண்டுதலின் பேரில் நமது தேவைகளை முன்னிலைப்படுத்திய கோரிக்கையை நான் அவரிடம் கையளித்துள்ளேன்.

மாணவர்களே, நீங்கள் அரச உத்தியோகத்தை தேடிச் சென்றாலும், தனியார் வேலையைத் தேடிச்சென்றாலும், சுய தொழில் செய்தாலும், வேலைக்காக வெளி நாடுகளுக்குச் சென்றாலும் உங்களுடைய கல்வித் தகைமையென்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் கல்வி அறிவுள்ளவர்களாகவும் கல்வித் தகைமையைக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.

தற்போது அரசாங்கம் பல்கலைக்கல்விக்காக இன்னுமொரு செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. ‘சித்தி பல்கலைக்கழகம்‘ என்ற ஒன்று உருவாக்கப்படப்போகிறது.

இதுவரை வெட்டுப்புள்ளிகள் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் முறை இருக்கிறது.

அதாவது 20சதவீதமான மாணவர்களே பல்பலைக்கழகங்களுக்குள் உள்வாங்கப்பட்டார்கள். இந்த ‘சித்தி பல்கலைக்கழகத்தில்‘ நீங்களாகவே விரும்பிய துறைகளில் விண்ணப்பித்து இணைந்து கொள்ள முடியும்.

அந்தப் பல்கலைக்கழகத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக்கொணடிருக்கின்றன.

க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்கள் இல்லாமல் நாங்கள் எந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினாலும் அதனால் பயனடையப்போவது நமது மாகாணத்தைச் சார்ந்தவர்களாக இருக்கப்போவதில்லை.

ஆகவே மாணவர்கள் கல்வித்தகமையை உயர்த்திக்கொள்ள வேண்டும். உங்கள் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள் என்றார்.