நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பதற்றநிலை : கொட்டகை அமைக்க பொலிஸார் தடை!
முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட தகரக் கொட்டகைகளை அகற்றுமாறு பொலிஸார் கூறியதையடுத்து அப்பிரதேசத்தில் பதற்றநிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், ஊர் மக்கள் இணைந்து, குறித்த பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
நாளைய தினம் இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வுக்காக ஆலய நிர்வாகத்தினர், ஆலயச் சூழலில் தகரப் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது குறித்த இடத்திற்கு அதிகளவான விசேட அதிரடிப்படையினர், மற்றும் பொலிஸார் வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கு வருகை தந்த பொலிஸார் , ஆலயச் சூழலில் தகரப் பந்தல் அமைக்கக்கூடாதெனத் தடைவிதித்திருந்தனர்.
தொடர்ந்தும் பொலிஸார் பந்தல் அமைப்பதற்கு தடை விதித்த நிலையில், ஆலய நிர்வாகத்தினர் தகரப்பந்தலை ஆலயச் சூழலில் அமைக்கக்கூடாதென்றால், அவ் அறிவித்தலை எழுத்துமூலம் தருமாறு போலீசாரிடம் கோரியிருந்தனர்.
அதனையடுத்து போலீசார் கோவில் வளாகத்தில் பந்தலை அமைக்குமாறு கூறி அங்கிருந்து விலகிச் சென்றிருந்ததாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.