அமைதியான தேர்தலுக்காக கஃபே அமைப்பின் கிராமத்திற்கு கிராமம் வேலைத்திட்டம் ஆரம்பம்!

அமைதியான தேர்தலுக்காக கஃபே அமைப்பின் கிராமத்திற்கு கிராமம் வேலைத்திட்டம் ஆரம்பம்!

அமைதியான தேர்தலுக்காக மக்களை விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டத்தை கஃபே அமைப்பு  இம்மாதம் 24ஆம் திகதிமுதல் நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் ஆரம்பிக்கவுள்ளதாக கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இன்று ( வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சித்திட்டமானது 24ஆம் திகதி வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் நாட்டின் சகல மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள அனைத்து மதங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கும் வகையில் இத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைதியான தேர்தலை நடத்துவதில் கட்சிகளின் பங்களிப்பு குறித்து இதன்போது அவர்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இம்முறை பொதுத் தேர்தல் காலகட்டத்தில் அமைதியான தேர்தலுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், இந்நிலை மோசமான நிலைக்குச் செல்வதை தவிர்ப்பதே தமது வேலைத்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக தேர்தல் மேடைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு வேகமாக பரவுவதாகவும் தேர்தலின் அமைதிக்கு இவ்விடயம் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கஃபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை தேர்தல் தொடர்பில் “ஹொட்ஸ்பொட்“ அதாவது அதிகளவாக இவ்வாறான சம்பவங்கள் பதிவான 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில் திகாமடுல்ல மாவட்டத்தை பிரதானமாக குறிப்பிட முடியும் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறான ஒரு சூழலில் இம்முறை தேர்தல் நடவடிக்கைகளை அமைதியான முறையில் நடத்துவதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே, கஃபே அமைப்பின் நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் என்று கஃபே அமைப்பின் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் மேலும் குறிப்பிட்டார்