இந்தியாவுடன் நெருக்கமாகும் ரணில் - கப்பலை அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்தும் சீனா..!
சீனாவின் மற்றுமொரு கடல்சார் ஆராய்ச்சிக் கப்பல் அக்டோபர் மாத இறுதியில் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களை வந்தடையவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Shi Yan 6 என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பலுக்கு இதுவரை இலங்கையின் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கவலை வெளியிட்டு வரும் இந்தியா, இந்த விவகாரத்தை உச்ச மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்ததன் பின்னணியில், இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு மற்றும் மூலோபாய அபிலாஷைகள் குறித்து கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு உறுதியளித்ததன் பின்னணியில் இந்த கப்பல் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சீன ஆராய்ச்சிக் கப்பல் யுவான் வாங் 5 அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தபோது, இந்தியா தீவிர கவலை தெரிவித்திருந்தது.
எப்படியிருப்பினும் Shi Yan 6 கப்பல் வரவுள்ளமை தொடர்பில் தமக்கு தெரியாது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இவ்வாறான கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர், அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
எப்படியிருப்பினும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நாரா நிறுவனம், இலங்கையில் உள்ள ருஹுனு பல்கலைக்கழகத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த கப்பலின் வருகை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாரா நிறுவன அதிகாரிகள், தங்கள் சொந்த ஆராய்ச்சிக்காக நீர் மாதிரிகளை எடுக்க கப்பலில் இணைவார்கள் என்று கூறியுள்ள நிலையில், இந்த ஆய்வு நடவடிக்கைகள் தெற்கு கடற்கரையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பல் கொரோனா தொற்றுநோய்க்கு முன்பே இலங்கைக்கு வரவிருந்ததாகவும், அது பல முறை தாமதமாகியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், இது இந்தியாவுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது என நம்புவதாக நாரா மேலும் கூறியுள்ளது.