கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூபா 100 கோடி - கிராமமே ஆச்சரியத்தில்...

கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூபா 100 கோடி - கிராமமே ஆச்சரியத்தில்...

மேற்கு வங்கத்தில் தினக்கூலியாக வேலை செய்து வாழ்ந்து வருபவரின் வங்கி கணக்கில் ரூ.100 கோடி பணம் வைபபு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல். கூலித்தொழிலாளியான இவர் தினசரி கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

வங்கியில் கணக்கு இருந்தாலும் அதில் இருந்த தொகை வெறும் ரூ.17 மட்டுமே.

இந்நிலையில் ஒருநாள் திடீரென அவரது வீட்டிற்கு வந்த சைபர் செல் துறையினர் அவரது வங்கி கணக்கில் ரூ.100 கோடி இருப்பதாகவும், அது எப்படி கிடைத்தது என அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறி வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதுடன், மே 30ம் திகதிக்குள் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டுள்ளனர்.மேலும் அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள முகமது நசிருல்லா மண்டல் “காவல்துறையினர் அழைத்ததும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு தூக்கமே வரவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. எனது வங்கி கணக்கில் ரூ.100 கோடி இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

கூலித்தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.100 கோடி இருப்பது அக்கிராமத்தினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.