கள்ளக்காதலிக்காக 2வயது மகனை கொன்று ஆற்றில் வீசிய நபர் - மகாராஷ்ட்ராவில் கொடூரம்

கள்ளக்காதலிக்காக 2வயது மகனை கொன்று ஆற்றில் வீசிய நபர் - மகாராஷ்ட்ராவில் கொடூரம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாராவி பகுதியைச் சேர்ந்தவர் ரஹ்மத் அலி சவுக்த் அலி அன்சாரி. இவர் ஜவுளி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தாஹிரா பானோ என்ற பெண்ணுடன் திருமணம் ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அன்சாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டது. அந்த அன்சாரியின் உறவுக்காரப் பெண் ஆவார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த கள்ள உறவு நீடித்த நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். அந்த பெண்ணோ மனைவியும் குழந்தையும் இருக்கக் கூடாது. அவர்கள் இல்லை என்றால் தான் உன்னை திருமணம் செய்து சேர்ந்து வாழ்வேன் எனக் கூறியுள்ளார்.

எனவே, தனது மனைவி மற்றும் மகனை கொலை செய்து தீர்த்துகட்ட அன்சாரி முடிவு செய்தார். முதலில் குழந்தையை கொல்ல சதித்திட்டம் தீட்டி கடந்த செவ்வாய்கிழமை அன்று தனது 2 வயது குழந்தையை வெளியே கூட்டி சென்றுள்ளார். உடன் சில உறவினர்களும் வந்துள்ளனர். முதலில் உறவினர்களுடன் சேர்ந்து நேரம்போவது போல் நடித்து பின்னர் குழந்தையை அருகே உள்ள மைதிலி நதிக்கு தூக்கி சென்றுள்ளார்.

அங்கு நீரில் மூழ்க வைத்து குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார். குழந்தையின் சடலத்தை பிளாட்டிக் பையில் வைத்து நதியில் தூக்கி வீசியுள்ளார். பின்னர் குழந்தையை நான் பார்க்கவில்லை காணாமல் போய்விட்டான் என நாடகமாடியுள்ளார். இருப்பினும் மனைவி தஹீராவுக்கு கணவர் மீது சந்தேகம் எழவே காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி காவல்துறை நடத்திய விசாரணையில் கடைசியாக உண்மையை ஒப்புக்கொண்டார் அன்சாரி. அவரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை கொலை, கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.