சாரதியைக் கட்டிவைத்து வாடகை கார் கடத்தல்! இருவர் மடக்கிப் பிடிப்பு

சாரதியைக் கட்டிவைத்து வாடகை கார் கடத்தல்! இருவர் மடக்கிப் பிடிப்பு

கார் ஒன்றை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் கிரிஉல்ல பிரதேசத்தில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 4 மணியளவில் 119 இலக்கத்தின் மூலம் கிரிஉல்ல பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த தொலைபேசி தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பில் வாடகை அடிப்படையில் சாரதியுடன் பெற்றுக்கொண்ட காரை, கிரிஉல்ல, கொஹிலவல பிரதேசத்தில் அதன் சாரதியைக் கட்டிப் போட்டுவிட்டு, குறித்த காரை கடத்திய சம்பவம் தொடர்பில் கிரியுல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் கிரியுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள், வீதித் தடையை ஏற்படுத்தி வாகனங்களை சோதனையிட்டு வந்துள்ளனர்.

இதன்போது, இன்று அதிகாலை பன்னலை திசையிலிருந்து கிரிஉல்ல திசை நோக்கிப் பயணித்த குறித்த கார், யகாபெதிஎல்ல பிரதேசத்தில் பொலிஸாரினால் அவதானிக்கப்பட்டு, நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்டுள்ளது. இதன்போது, பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி குறித்த கார் பயணித்த வேளையில் பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இத்துப்பாக்கிச் சூடு, காரின் ரயரில் பாய்ந்ததன் காரணமாக கார் சற்று தூரம் சென்று நிறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காரில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் கிரிஉல்ல மற்றும் கொழும்பைச் சேர்ந்தவர்களாவர்.சம்பவம் தொடர்பில் கிரிஉல்ல பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.