15 வயதில் கர்ப்பமான சிறுமி… பயத்தில் Youtube பார்த்து குழந்தையைப் பெற்றெடுத்த அவலம்!

15 வயதில் கர்ப்பமான சிறுமி… பயத்தில் Youtube பார்த்து குழந்தையைப் பெற்றெடுத்த அவலம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமி ஒருவர் தனது தாய்க்கு பயந்து யூடியூப் பார்த்து குழந்தையைப் பெற்றெடுத்து அதைக் கொலையும் செய்த அவலம் அரங்கேறியிருக்கிறது.

நாக்பூர் அடுத்த அம்பாசாரி எனும் பகுதியில் வசித்துவந்த சிறுமி ஒருவர், உடல்நிலை சரியில்லை என்று கூறி, தான் கர்ப்பமான விஷயத்தையே பெற்ற தாயிடம் இருந்து மறைத்துள்ளார். மேலும் பல்வேறு யூடியூப் வீடியோக்களைப் பார்த்து எப்படி பிரசவம் பார்ப்பது எனவும் கற்றுகொண்டுள்ளார். இதன்மூலம் ஒரு பெண் குழந்தையையும் தனது தாய்க்குத் தெரியாமலே பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் குழந்தை அழுதால் அக்கம் பக்கத்தினருக்குத் தெரிந்துவிடும் என்பதால் பிறந்த குழந்தையை பெல்ட்டின் மூலம் கழுத்தை நெரித்துக் கொலையும் செய்துள்ளார்.

இதையடுத்து குழந்தையின் சடலத்தைத் தனது தாயிடம் இருந்து மறைப்பதற்காக பெட்டியில் வைத்து அதை மாடியில் வைத்துள்ளார். வெளியே சென்றிருந்த சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்ததும் சிறுமியின் உடல்நிலை குறித்து விசாரித்தபோது அவர் நடந்ததைக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பெற்ற தாய்க்கு தெரியாமல் யூடியூப் பார்த்து குழந்தை பெற்றுக்கொண்ட சிறுமி குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிறுமி ஆன்லைன் மூலம் ஆண் ஒருவருடன் நட்பாகப் பழகி வந்தததையும் ஒருநாள் அந்த நபர் அவருடைய நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, மதுவைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தததையும் கண்டறிந்துள்ளனர். இதனால் கர்ப்பம் அடைந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையைத் தாயிடம் இருந்து மறைப்பதற்காக யூடியூப் பார்த்து தானே பிரசவம் செய்துகொண்டதையும் அதோடு அந்தக் குழந்தையை மறைப்பதற்காக கொலை செய்த அவலத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து பாலியல் குற்றங்களுக்கான பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்த போலீஸார் பாலியல் வன்கொடுமை செய்த நபரைத் தேடிவருவதாகக் கூறியுள்ளனர். மேலும் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தப் பின்னர் கொலை குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 15 வயதில் யூடியூப் பார்த்து தானே பிரவசம் பார்த்துக் கொண்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.