லிவ்-இன் உறவுக்கும் பதிவு தேவை… உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

லிவ்-இன் உறவுக்கும் பதிவு தேவை… உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்துவாழும் தம்பதிகளுக்கு சட்டப்பூர்வமான பதிவுமுறை தேவை எனும் கோரிக்கையை முன்வைத்து வழக்கறிஞர் மம்தா ராணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கால மாற்றத்திற்கு ஏற்ப தற்போதைய சூழ்நிலையில் திருமணம் செய்துகொள்ளாமலே ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் முறை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஆனால் இதுபோன்ற உறவுமுறைகளிலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய உறவுமுறைகள் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்றாலும் இதை அங்கீகரிக்கும் முறையான சட்டங்களும் இந்தியாவில் இல்லை. இந்நிலையில் வழக்கறிஞர் மம்தா ராணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது இந்தியாவில் சட்டப்படி குற்றம் அல்ல. ஆனால் அதைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் சட்டங்களும் ஏதும் கிடையாது. திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழும் தம்பதிகளுக்கும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இதுவரை உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மட்டுமே பாதுகாப்பாக இருந்து வந்துள்ளன. இதனால் சட்டப்பூர்வமான வழிமுறை மற்றும் பதிவுமுறை தேவை” என்று மம்தா ராணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் லிவ்-இன் உறவுமுறைகளில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்கவும், பொய்யான பாலியல் வழக்குகளைக் கண்டறியவும் அவர்களைப் பற்றிய விவரங்கள் நீதிமன்றங்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் லிவ்-இன் உறவுமுறைகளில் வாழ்பவர்களைப் பற்றிய போதுமான விவரங்கள் நீதிமன்றங்களுக்கு தெரிவதில்லை. எனவே இதுபோன்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்கு திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்பவர்கள் தங்களது உறவுநிலையை பதிவு செய்துகொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தி பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் வழக்கறிஞர் மம்தா ராணி, திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது அரசியல் சாசனம் பிரிவு 19 மற்றும் 21 – ஐ மீறுவதாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மத்திய அரசு லிவ்-இன் உறவுமுறைகளுக்கு முறையான பதிவு செய்யும் நடைமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும் உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உச்சநீதிமன்றம் இந்த மனு குறித்த விசாரணையை விரைவில் எடுத்துக்கொள்ளும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.