விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி நிர்வாகி கணவருடன் கைது: விருதுநகரில் பரபரப்பு

விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி நிர்வாகி கணவருடன் கைது: விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர்: விருதுநகரில் விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி துணைத்தலைவி, அவரது கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் கொல்லர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (42). இவரது மனைவி அமல்ராணி‌ (40). இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி துணை தலைவியாக உள்ளார். கணவன், மனைவி இருவரும் விருதுநகர் பேராலி ரோடு ஐடிபிடி காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வீட்டில் கடந்த சில நாட்களாக விபச்சாரம் நடப்பதாக விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து ஊரக காவல் நிலைய ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் போலீசார் அந்த வீட்டிற்கு சென்றனர்.

அந்த வீட்டில், சாத்தூர் மேட்டமலையைச் சேர்ந்த கற்பகவல்லி (29) மற்றும் சிலர் இருந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அங்கிருந்த பெண்களை போலீசார் மீட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி துணைத்தலைவி அமல்ராணி, அவரது கணவர் சந்திரசேகரன் ஆகியோரை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி நிர்வாகி கணவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.