கடற்படை பங்காண்மை மற்றும் அனர்த்த பதிலளிப்பு திறன்களை மேம்படுத்தி நிறைவடையும் பயிற்சி

கடற்படை பங்காண்மை மற்றும் அனர்த்த பதிலளிப்பு திறன்களை மேம்படுத்தி நிறைவடையும் பயிற்சி

எட்டு நாட்களாக நேரடியாகவும் மற்றும் கடலிலும் நடைபெற்ற, இலங்கை மற்றும் அமெரிக்க இராணுவத்தினரிடையே ஒத்துழைபை மேம்படுத்திய Cooperation Afloat Readiness and Training (CARAT)/Marine Exercise (MAREX) Sri Lanka 2023 பயிற்சியானது ஜனவரி 26 ஆம் திகதி கொழும்பில் நிறைவடைந்தது.

கொழும்பிலும், திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இலங்கை கடற்படை (SLN) தளங்களிலும், மற்றும் லட்சத்தீவு கடலிலும் ஜனவரி 19 - 26 வரை CARAT/MAREX Sri Lanka பயிற்சி நடைபெற்றது.

மனிதாபிமான உதவி, அனர்த்த நிவாரணம் (HADR) மற்றும் கடல்சார் பாதுகாப்பு திறன்கள் ஆகிய விடயங்களில் நிபுணத்துவத்தை அதிகரிப்பதில் இப்பயிற்சியானது கவனம் செலுத்தியது.

“எமது செழிப்பிற்காக கடலை நம்பியிருப்பதும், அனைத்து இறையாண்மை கொண்ட அரசுகளும் ஒன்றுக்கொன்று அமைதியான முறையில் தொடர்பு கொள்ளவும், விதிகள் அடிப்படையிலான ஒரு ஒழுங்கினைப் பின்பற்றவும் கூடிய ஒரு உலகத்தைப் பற்றிய எமது பொதுவான தொலைநோக்கும் எமது கடல்சார் வேர்களில் இருந்து வருகிறது” என அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் துணைக் கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் ஜொக்கின் ஜே. மார்டினெஸ் டி பினிலோஸ் கூறினார். “இந்தப் பயிற்சியும், அதை நிஜத்தில் மேற்கொள்வதற்கு உதவிய அனைவரின் முயற்சிகளும், எமக்குப் பொதுவான அந்தத் தொலைநோக்கினை அடைவதில் அமெரிக்காவும் இலங்கையும் கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கான ஒரு சான்றாக விளங்குகின்றன.”

இலங்கை கடற்படையின் கடலோர ரோந்துக் கப்பல்களான SLNS கஜபாஹு (P 626) மற்றும் SLNS விஜயபாஹு (P 627) என்பன 13ஆவது Marine Expeditionary Unit (MEU) உடன் நிலம் மற்றும் நீர் இரண்டிலும் இயங்கக்கூடிய போக்குவரத்து கலத்துறை மேடையான USS Anchorage (LPD 23) இனைக் கடலில் சந்தித்தன. இவ்வருட பயிற்சியில் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றின் பங்கேற்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர். இரண்டு USN தரையிறங்கும்கலன்கள் முள்ளிகுளத்தின் ஒரு கடற்கரைப் பகுதிக்கு துருப்புக்கள், பொருட்கள் மற்றும் வாகனங்களை HADR பயிற்சிக்காக கரைக்கு இடம்மாற்றின. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பயிற்சிகள், ஒரு உருவகப்படுத்தப்பட்ட அனர்த்த சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கும் தொடர்பாடலை மேற்கொள்வதற்குமான பங்காளர்களின் திறனை பரீட்சித்து அதை மேம்படுத்தியது.

“இந்தப் பயிற்சியில் பங்குபற்றிய அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்கு நான் நன்றி கூறுவதுடன், எதிர்பார்ப்புகளையும் தாண்டி சிறப்பாக இப்பயிற்சியை நடாத்துவதற்காக கடந்த சில நாட்களாக வெளிப்படுத்தப்பட்ட அனைத்து கடின உழைப்பு மற்றும் தொழில்வாண்மைத்துவம் ஆகியவற்றை நான் மிகவும் பாராட்டுகிறேன்” என இலங்கை கடற்படையின் கட்டளைத்தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார். “எம்மனைவருக்கும் பொதுவான நலன்களை திறம்பட கையாளுவதற்காக நாம் பேணிவரும் வலுவான உறவுகளைப் பேணிக்காப்பதற்காக இலங்கை, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையேயான இந்த நல்லுறவானது எதிர்காலத்தில் மென்மேலும் தொடரும் என நான் நம்புகிறேன்.” எனவும் அவர் தெரிவித்தார்.

கடலில் நடத்தப்பட்ட மேலதிக பயிற்சிகளுள் பிரிவு தந்திரோபாயங்கள், பார்வையிடல், ஏறுதல், தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் (VBSS), கடலில் வைத்து மீள்நிரப்புதல் தொடர்பான அணுகுமுறைகள் மற்றும் உளவு மற்றும் துப்பாக்கிப் பயிற்சிகள் ஆகியவை உள்ளடங்குகின்றன. VBSS பயிற்சிகள், இப்பயிற்சியின் கடலில் நடைபெற்ற பகுதியில் பங்கெடுத்த SLN கப்பல்களின் தளங்களில் துருப்புகள் மற்றும் பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் போன்ற பயிற்சிகளை Anchorage மேலிருந்த உலங்குவானூர்திகள் வெற்றிகரமாக மேற்கொண்டன.

கரையில் நடைபெற்ற விடயங்களுள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் அவர்களால் நடாத்தப்பட்ட இலங்கை மற்றும் அமெரிக்க இராணுவங்களின் உறுப்பினர்களுடனான பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒரு வட்டமேசை மாநாடு, இரு நாட்டு கடற்படை வாத்தியக்குழுக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள், ஒரு விளையாட்டு தினம் மற்றும் ஒரு தொடர்ச்சியான சமூக சேவை நடவடிக்கைகள் என்பன உள்ளடங்கியிருந்தன.

“இந்த ஐந்தாவது CARAT/MAREX Sri Lanka பயிற்சியின்போது, எமது இரு நாடுகளுக்கும் செயன்முறைப் பிரயோகத்துடன் கூடிய அறிவுப் பரிமாற்றங்களை நடாத்த முடிந்தது,” என 13ஆவது MEU இன் படைப்புரிவுகளை தரையிறக்கும் அணி 2/4 இன் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்னல் ஜாரெட் ரெட்டிங்கர் கூறினார். “அவ்வாறு செய்வதன் மூலம், நாங்கள் எங்களது திறன்களைக் கூர்மைப்படுத்தினோம், இணைந்து செயற்படும் திறனை மேம்படுத்தினோம், மற்றும் ஒரு சுதந்திர மற்றும் திறந்த இந்தோ- பசிபிக்கிற்கான ஒரு பரஸ்பர தொலைநோக்கிற்காக இணைந்து பணியாற்றினோம்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கரையில் நடைபெற்ற பயிற்சிகள் சுழியோடுதல் மற்றும் நீருக்கடியிலான கட்டுமானம், மருத்துவ உதவி மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு போன்ற விடயங்கள் தொடர்பான விடய நிபுணத்துவ பரிமாற்றங்களைக் கொண்டிருந்தன. மேலதிகமாகப் பங்குபற்றிய அமெரிக்க அலுவலர்கள் மற்றும் கப்பல்களுள் U.S. 7ஆவது கப்பற்படையின் ஒரு P-8A Poseidon கப்பல் மற்றும் அதன் அதிகாரிகள், (CTF) 72, CTF 73, CTF 76/3, DESRON 7 படையணியின் கட்டளைத்தளபதி மற்றும் Amphibious Squadron 7 என்பன உள்ளடங்கியிருந்தன. “தரையிலும் கடலிலும் CARAT பயிற்சியின் வெற்றியானது, 75 ஆண்டுகளாக வலுவான அமெரிக்க - இலங்கை இருதரப்பு உறவின் ஆழத்திற்கு ஒரு சான்றாகும்” என தூதுவர் சங் கூறினார். “இப்பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்றுவதற்காக இப்பங்காண்மையினை மேலும் அதிகரிப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

CARAT/MAREX Sri Lanka என்பது, பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணங்களை வழங்குதல் போன்ற விடயங்களைப் பயிற்சி செய்தல், கடல்சார் புரிதல், பங்காண்மைகள் மற்றும் இணைந்து செயற்படும் திறன் ஆகியவற்றை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்ட இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு இருதரப்பு பயிற்சியாகும். CARAT தொடரானது அதன் 28ஆவது வருடத்தில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற கடல்சார் பாதுகாப்புச் சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவும் அதன் பங்காளர் படைகளும் இணைந்து செயற்படுவதற்கான அவற்றின் திறன்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பன்னாட்டுப் பயிற்சிகளை கொண்டுள்ளது.