நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை!

நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் ஆகியோா் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா். கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்த நிலையில் இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆறு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த போதிலும், இந்த வழக்கில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று கூறி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.