உங்களின் அழகிய கூந்தலை எளிதாக பராமரிக்க..

உங்களின் அழகிய கூந்தலை எளிதாக பராமரிக்க..

தற்போதைய பரபரப்பான உலகில் இளம்வயதினரிடம் கூந்தல் உதிர்வு பிரச்னை என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளிடம் கூட கூந்தல் உதிர்வு பரவலாகி வருகிறது. சத்தான உணவுகளை சாப்பிடாதது மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை உட்பட பல்வேறு காரணங்களால் கூந்தல் உதிர்வது அதிகரித்து வருகிறது. எனவே, உங்களின் அழகிய கூந்தலை பராமரிக்க எளிய டிப்ஸ்கள் சில...

கூந்தலின் வளர்ச்சியில் ஊட்டச்சத்துள்ள உணவுகளுக்கு முக்கிய இடம் உள்ளது. எனவே, புரதம், இரும்பு, வைட்டமின் சி, ஒமேகா 3 மற்றும் நார்சத்து அதிகமுள்ள உணவை உண்ணும் போது கூந்தலின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும் என்பதால் அடிக்கடி தண்ணீர் குடிக்கலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூந்தலின் நுனிப்பகுதியை வெட்டி விட வேண்டும். குறைந்தபட்சமாக 1/4 இன்ச் அளவாவது கூந்தலை வெட்டலாம் . தலைக்கு குளித்தவுடன் ஈரமான கூந்தலுடன் தூங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

 

 


latest tamil news

 

 


கூந்தலை ஸ்ரெய்ட்டனிங் செய்ய, அடிக்கடி வெப்பக் கருவிகளை பயன்படுத்துவதை முடிந்தளவுக்கு தவிர்க்கலாம். மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தும் போது கூந்தலின் இயற்கைத் தன்மை பராமரிக்கப்படுகிறது. அதேபோல், ஹேர் டிரையரை பயன்படுத்தும் போது படிப்படியாக வெப்பத்தின் அளவை அதிகரிப்பது முக்கியமானது. முடிந்தவரை காற்றில் உலர வைக்க முன்வரலாம்.

உச்சந்தலையை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது. கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உச்சந்தலையில் அடிக்கடி மசாஜ் செய்யலாம். வாரம் ஒரு முறையாவது கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தடவ வேண்டும்.