சருமத்தை பாதிக்கும் தேமல்! போக்க சில டிப்ஸ்!
சருமம் தான் நம் உடலுக்கு பாதுகாவலனாக இருக்கிறது. இது தான் தூசி, வெயில், மாசிலிருந்து நம்மை பாதுக்காக்கிறது. ஆனால் தற்போது காற்று மற்றும் நீரில் இருக்கும் கிருமிகளால் பல்வேறு சரும ரீதியான பிரச்னைகள் வருகின்றன. அப்படி சருமத்தில் அலர்ஜியால் வரும் ஒரு பாதிப்பு என்றால் அது தேமல். அவை சருமத்தின் இயல்பான நிறத்தை மங்க செய்து, ஆங்காங்கே வெள்ளை திட்டுகளாக இருக்கும்.
இப்படி வெண்மை நிறத்தில் காணப்படும் தேமல், எளிதில் மற்ற பகுதிகளுக்கு பரவக்கூடும். இவை மலேசேசியாஃபர்ஃபர் (Malassezia Furfur) எனும் கிருமியால் உண்டாகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு சிலருக்கு சத்து குறைவால் ஏற்படலாம். சோப்பை மாற்றி உபயோகித்தாலும் உடனே சிலருக்கு தேமல் வரலாம்.
சரும அழகை பாதிக்கும் தேமல் குறித்து இப்போது பார்ப்போம்.
|
• கிருமியால் வரும் தேமல் வர முக்கிய காரணங்கள் வியர்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது.
• தேமல் பாதிப்பு இருப்பவர்களின் சோப்பு, டவல் போன்றவற்றை பயன்படுத்துவதினால் கூட தேமல் வரும்.
• இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும்.
• உடலில் முகம், கழுத்து, மார்பு, தோள், கை, கால் என எந்த பகுதியிலும் வரும்.
• தோலில் நிறம் குறைந்து அல்லது அதிகரித்து திட்டுத்திட்டாகப் படைகள் போன்று காட்சியளிக்கும்.
• தேமல் படையைச் சுற்றி ஓர் எல்லைக்கோடு காணப்படும், செதில்களும் சில சமயம் வரும்.
• சிலருக்கு அவை அதிக நாட்கள் இருக்கும் போது அரிப்பு ஏற்படுத்தும்.
• சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக காலம் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கும் தேமல் வரக்கூடும்.
சிகிச்சை முறை:
சிலருக்கு சோப்பு, பவுடர் போன்ற பொருட்களால் ஏற்படும் அலர்ஜியால் தேமல் வரும். அப்படி அலர்ஜி தரும் பொருட்களை பயன்படுத்தாமல் விட்டுவிட்டாலே தேமல் மறையும். நாள்பட தேமல் இருந்தால் தோல் மருத்துவரை அணுகலாம். அவர்கள் தேமலைப் போக்கப் தரும் களிம்புகள், பவுடர்கள், மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம்.
தேமல் மறைய சில டிப்ஸ்:
|
• தினமும் இரு வேளை கடலை மாவு அல்லது பச்சை பயறு மாவு கொண்டு குளிக்க வேண்டும்.
• சோப்பு வேண்டும் என நினைப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் கெமிக்கல் குறைவான சோப்பை பயன்படுத்த வேண்டும்.
• துளசி இலைகளை பேஸ்ட் போல் அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
• வேப்பிலைகளை ஒரு கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், சரும பிரச்னை குறையும்.
• வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், தேமல் மறையும்.
• மஞ்சள் தூளை தயிரில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைத்து, கழுவலாம்.