இந்த வயதிலும் தாம்பத்யத்துக்கு வற்புறுத்துகிறார்!" - 89 வயது கணவன்மீது புகாரளித்த 87 வயது மூதாட்டி

``இந்த வயதிலும் தாம்பத்யத்துக்கு வற்புறுத்துகிறார்!" - 89 வயது கணவன்மீது புகாரளித்த 87 வயது மூதாட்டி

89 வயது முதியவர் தன் உடல்நலம் சரியில்லாத மனைவியை உடலுறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதியில் 89 வயது முதியவர் ஒருவரும், அவரின் 87 வயது மனைவியும் தங்கள் மகன் வீட்டில் வசித்துவந்தனர். இந்த நிலையில், அந்த 89 வயது முதியவர் தன் உடல்நலம் சரியில்லாத மனைவியை உடலுறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணவரின் தொல்லை தாங்கமுடியாமல் அந்த மூதாட்டி பெண்களுக்கான `அபயம்' ஹெல்ப்லைனுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அபயம் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``89 வயதான முதியவர் உடல் நலம் குன்றிய மனைவியை தன்னுடன் அடிக்கடி பாலியல் உறவு வைத்துக்கொள்ளக் கேட்டிருக்கிறார். கணவரின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத அந்த மூதாட்டியை அவர் நச்சரித்திருக்கிறார். வயதானதால் மூதாட்டியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் அந்த மூதாட்டி அசைய முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டார்.

 

இந்த நிலையில், தன் மனைவியின் நிலை குறித்து அறிந்திருந்த முதியவர், படுத்த படுக்கையான நிலையிலும் உடல் உறவுக்கு வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு அந்த வயதானப் பெண் மறுத்ததால், அந்த முதியவர் அவரை துன்புறுத்தி வந்திருக்கிறார். அது அக்கம் பக்கத்தினர் அனைவருக்கும் தெரியும். முதியவரின் இந்த செயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூதாட்டி, இறுதியில் அபயம் ஹெல்ப்லைனுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார். முதன்முறையாக இப்படியான புகாரைப் பெற்ற நாங்கள் வயது முதிர்ந்த பெண் இருக்கும் அந்த வீட்டுக்குச் சென்றோம்.

 

கணவருக்கு ஆலோசனை வழங்க முயன்றோம். முதியவரிடம் யோகா செய்ய முயலுமாறு கேட்டுக்கொண்டோம். மேலும், அவர் கவனத்தை உடலுறவிலிருந்து திசை திருப்ப மூத்த குடிமக்கள் கிளப்பில் சேருமாறும் அதிகாரிகள் அவரை வலியுறுத்தியிருக்கின்றனர். இந்தப் பிரச்னையில் நீண்டகால தீர்வுக்காக அந்த முதியவரை பாலியல் நிபுணரிடம் அழைத்துச் செல்லும்படி குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டோம்" எனத் தெரிவித்தார்.