பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம்.. தாய்லாந்து அரசு முடிவு

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம்.. தாய்லாந்து அரசு முடிவு

தொடர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய தாய்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது. குற்றவாளிகள் ஆண்மை நீக்கம் செய்ய முன்வரும்பட்சத்தில் அவர்களின் தண்டனைக் காலத்தை குறைக்கவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் 2013 முதல் 2020 வரை கைது செய்து விடுதலை செய்யப்பட்ட 16,413 குற்றவாளிகளில், சுமார் 4,848

பேர் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால், மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு ரசாயன முறையில், ஆண்மை நீக்கம் செய்ய தாய்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் கீழவையைத் தொடர்ந்து செனட் சபையில் திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டபிறகு, மன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன்பிறகு இந்த மசோதா சட்டமாக்கப்பட உள்ளது. மேலும் இச்சட்டத்தின் படி, அந்த குற்றவாளிகள் 10 வருட காலம் மின்னணு கண்காணிப்பு காப்புகள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் எனவும், அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த செவ்வாய்கிழமை பேசிய தாய்லாந்து நீதி அமைச்சர் சோம்சக் தெப்சுதின், “என்னால் இனி பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றஙகள் குறித்த செய்திகளை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இந்த சட்டம் சீக்கிரம் நிறைவேற வேண்டும்” என கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் ஆண்கள் முன்னேற்ற இயக்கம் அறக்கட்டளையின் இயக்குனர், ஜேட் சௌவிலாய், இந்த நடைமுறை, பாலியல் குற்றஙகளை குறைக்க உதவாது என கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போதே அவர்களின் மனநிலையை மாற்றி மறுவாழ்வு அளிக்க வேண்டும் எனவும் மரண தண்டனைகள், ஆண்மை குறைப்பு போன்ற தண்டனைகள் குற்றவாளிகள் திருந்தி மறுவாழ்வு வாழ ஊக்குவிக்காது என தனது கருத்தினை வெளிபடுத்தியுள்ளார்.

போலந்து, தென்கொரியா, ரஷ்யா, ஈஷ்டோனியா மற்றும் அமெரிக்காவில்  ஒரு சில மாகாணங்களில் மட்டுமே பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் நடைமுறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.