
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவது தொடர்பில் சுகாதார அமைச்சின் விசேட தீர்மானம்!
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவது தொடர்பில் சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கல்வி அமைச்சில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் கடந்த 13 ஆம் திகதி முதல் இன்று வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் தொடர்பில் கல்வி அமைச்சு அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.
இதன்படி, சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் ஆலோசனைகளின் அடிப்படையில், பாடசாலைக் கல்வித்துறையில் ஏற்படக்கூடிய நிலைமைகளை கண்காணிப்பதற்காக, ஒருவாரகால விடுமுறை வழங்குவதாக கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.
இதன் பிரகாரம் கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் முதல் இன்று வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன.
அத்துடன், இந்த தீர்மானத்தை, அனைத்து தனியார் பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள் மற்றும் மேலதிக தனியார் வகுப்புகள் ஆகியனவும் பின்பற்ற வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.