சர்வதேச விமான சேவைகளை இன்று முதல் ஆரம்பிக்கிறது இந்தியா!

சர்வதேச விமான சேவைகளை இன்று முதல் ஆரம்பிக்கிறது இந்தியா!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகளை இந்தியா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கிறது.

இதன்படி அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் ஆரம்பிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங்பூரி கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர்,  இந்த மாதம் 17 திகதி முதல் 31 ஆம் திகதிவரை அமெரிக்காவிற்கு யுனைடெட் ஏயார்லைன்ஸ் நிறுவனம் 18 விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் டெல்லி – நெவார்க் இடையே தினசரி சேவையும் டெல்லி – சான்பிரான்சிஸ்கோ இடையே வாரம் மூன்று முறையும் விமான போக்குவரத்து மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஏயார் பிரான்ஸ் நிறுவனம்   28 விமான சேவைகளை வழங்க உள்ளதுடன் இவை டெல்லி,  மும்பை,  பெங்களுர்  இருந்து  பரிஸ்  நகருக்கு இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இதேபோல்  பிரித்தானியா,  ஜெர்மனி  ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக  அறிவித்துள்ள அவர், ஜெர்மனிக்கு  லுப்தான்சா ஏயார்லைன்ஸ் நிறுவனம்  விமான சேவைகளை வழங்க உள்ளதாக கூறியுள்ளார்.

இதேவேளை சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும்,  பல நாடுகள் விமான சேவைக்கு ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கொரோனா பிரச்சினை காரணமாக  பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து  படிப்படியாக விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.