விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி செம்பட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மதுரங்குளி வேல்சிமனபுர பகுதியைச் சேர்ந்த 49 வயதிடைய நபரும், மதுரங்குளி வீரபுர பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் குறிப்பிட்டனர்.

மதுரங்குளியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த மோட்டார் சைக்கில் ஒன்றும் எதிர்த்திசையில் இருந்து வந்த துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சாரதியும், பின்பக்கமாக அமர்ந்து சென்ற நபரும், துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபரும் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்த நபர் புத்தளம் தள வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.கே.ஜி. விக்ரமசிங்கவின் ஆலோசனையில் போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.