சுகாதார அமைச்சுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான உண்மையான தகவல்களை மக்களுக்கு வழங்குவது சுகாதார கடமை எனவும் தற்போது வழங்கப்பட்டுள்ள தெளிவுப்படுத்தல்கள் போதுமானவை அல்ல எனவும் சுகாதார அமைச்சுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அதன் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
நிலவும் உண்மையான நிலைமையை தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பு சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் உட்பட அதிகாரிகளுக்கு இருக்கின்றது என்பதை நாங்கள் அன்றும் கூறினோம், இன்றும் கூறுகிறோம்.
அவர்கள் பொய் கூறுகின்றனர் என்பது அர்த்தமாகாது. மக்களுக்கு வழங்கும் தெளிவுப்படுத்தல்கள் போதுமானதாக இல்லை.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை தொற்று ஏற்படாதவர்கள் என்று கூறுகின்றனர். ஏன் அப்படி நடக்கின்றது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
குண்டசாலையில் ஒரு நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று கூறினால் மாத்திரமே அங்குள்ள மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். அதனை அறிவிப்பதற்கு தாமதமாகும் போது பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து அதிகம்.
இதனால், இந்த விடயத்தை சுகாதார அமைச்சுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். சகல தகவல்களையும் தாமதமின்றி, தெளிவாக மக்களுக்கு வழங்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.