யுவான் நாணயத்தைப் பயன்படுத்தி இலங்கை-சீனா வர்த்தகம்?

யுவான் நாணயத்தைப் பயன்படுத்தி இலங்கை-சீனா வர்த்தகம்?

 இலங்கையில் உள்ள சீன வர்த்தகக் கவுன்சில் ஏற்பாடு செய்து, சீன வங்கியின் கொழும்பு கிளை ஆதரவுடன் '2025 RMB சர்வதேச மயமாக்கல் மன்றம்' அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளுக்குச் சீனாவின் RMB வசதியைப் பயன்படுத்துவதன் அவசியம் இதில் வலியுறுத்தப்பட்டது.

யுவான் நாணயத்தைப் பயன்படுத்தி இலங்கை-சீனா வர்த்தகம்? | Sri Lanka China Trade Using The Yuan Currency

மத்திய வங்கி ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்கள் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "எனக்கு நினைவிருக்கிறது, சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் நாங்கள் சீனாவுடன் நாணய மாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்.

மத்திய வங்கி சார்பாக அதில் கையெழுத்திட்டது நான்தான். RMB வசதியை இலங்கையில் ஊக்குவிப்பதற்காக அதன்பிறகு மேலும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தோம்.

அந்தக் காலத்தில் எமக்கு RMB வசதி நடைமுறையில் இருந்திருந்தால், எமக்குக் கிடைத்த நாணய மாற்று வசதியைப் பயன்படுத்தியிருக்கலாம். நாங்கள் நீண்ட தூரம் பயணித்துள்ளோம்.

2010 இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, RMB வசதி உலகின் 35வது சர்வதேச நாணய அலகாக இருந்தது; 2024 இல் அது உலகின் நான்காவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

இந்தக் காலத்தில் RMB குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. BRICS அமைப்பை பலப்படுத்துவதன் மூலம், உள்நாட்டு நாணயங்களை வெளிநாட்டு பரிவர்த்தனைகளில் பயன்படுத்த முடியும்.

இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான பொருளாதார உறவு உள்ளது. இலங்கையின் பிரதான இறக்குமதிப் பங்காளியாகச் சீனா உள்ளது.

அத்துடன், சீனா இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகும். 2024 இல், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் அமெரிக்க டொலர் 4.3 பில்லியனாக இருந்தது.

மறுபுறம், 2023 இல் அமெரிக்க டொலர் 2.8 பில்லியனாக இருந்த வர்த்தக இடைவெளி, 2024 இல் அமெரிக்க டொலர் 4.1 பில்லியனாக விரிவடைந்துள்ளது. இது சீனாவுக்கு சாதகமான வகையில் அதிகரித்து வருகிறது.

இந்நிகழ்வில் இலங்கையின் சீனத் தூதுவர் ஷி ஷென்க் ஹொன்க், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் அமைச்சர் அனில் ஜயந்த ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டனர்.