இலங்கையில் அதிகரித்து வரும் வாடகை கொலையாளிகள்
இலங்கையில் வாடகை கொலையாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக அண்மையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஒரு தொகை பணத்திற்காக படுகொலைகளை மேற்கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அநேகமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் போது குறித்த பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் துப்பாக்கி தாரிகளுக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலும் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் இவ்வாறு பணத்திற்காக படுகொலைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது
படுகொலை ஒன்றை மேற்கொள்வதற்கு நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை அறவீடு செய்யப்படுவதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில சந்தர்ப்பங்களில் வெறும் போதை பொருட்களுக்கு மட்டும் கூட படுகொலைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் நாடு முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் இதில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் சிலர் எவ்வித குற்ற செயல்களுடனும் தொடர்பு பெறாத பொதுமக்களாவர்.
நாட்டில் இடம் பெற்ற 103 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 76 சம்பவங்கள் திட்டமிட்ட குற்றவியலுக்கு கும்பல்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடுகள் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
குற்றக் கும்பல்களுடன் தொடர்பு பேணக்கூடிய நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டமொன்று குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் இவ்வாறான குற்றச் செயல்களுக்கு தூண்டப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுவிப்பதன் ஊடாக இவ்வாறான பாரிய குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் விசேட தேடுதல்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் ஊடாகவும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒப்பந்தத் தொகையாக 15 லட்சம் ரூபாய் பேசப்பட்டதாகவும், கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலையின் போது ஒப்பந்த தொகையாக 1.5 கோடி ரூபாய் ஒப்பந்தமாக பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.