தெற்கு கடற்பரப்பில் சிக்கிய 330 கிலோ ஹெரோயின்: மேலும் 5 சந்தேக நபர்கள் கைது

தெற்கு கடற்பரப்பில் சிக்கிய 330 கிலோ ஹெரோயின்: மேலும் 5 சந்தேக நபர்கள் கைது

இலங்கைக்கு தெற்காக 737 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடல் எல்லையில் சுமார் 3,300 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வு சேவை, கடற்படையினர் மற்றும் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 330 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 11 பேர் முன்னதாக இரண்டு கப்பல்களில் கைதுசெய்யப்பட்டனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ள மொத்த சந்தேகநபர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் துபாயில் உள்ளதோடு அவர் அங்கிருந்து இவ்வாறு வர்த்தகத்திற்காக போதைப் பொருளை அனுப்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த சந்தேகநபர்கள், போதைப் பொருள் மற்றும் கப்பல்கள் என்பன கொழும்புக்கு கொண்டு வரப்படுவதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.