
மீண்டும் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடா..! ஜனாதிபதியின் அறிவிப்பு
வாகன இறக்குமதிக்காக இதுவரை 150 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை மீள நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை என அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர் பேரவையின் 26ஆவது கூட்டத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதிக்காக வங்கிகள் திறக்கும் கடன் கடிதங்கள் தினசரி அறிக்கைகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஓரளவு சுதந்திரமாக இயங்கக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்க இந்த வருட வரவு செலவு திட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் சுதந்திரமான இயக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட வளர்ச்சி வேகத்தை எட்ட முடியும்.
பொருளாதாரம் பெரிய அதிர்ச்சியை உணராத வகையில் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது ரூபாவிற்கு தாங்க முடியாத அழுத்தங்கள் ஏற்படாதவாறு தற்போதைய அரசாங்கம் அவதானத்துடன் செயற்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.