
வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (12.03.2025) நாடு தழுவிய வேலைநிறுத்தம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது.
நேற்றைய தினம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பதிவான வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, இன்று காலை 8 மணி முதல் ஆரம்பமாகும் வகையில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால், குறித்த வேலைநிறுத்தம் இன்று காலை 8 மணி முதல் நாளை (13.03.2025) காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றாலும், அவசர சிகிச்சை சேவைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாதவாறு தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த வேலைநிறுத்தம் சிறுவர் வைத்தியசாலைகள், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம் மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படாது எனவும் அந்த சங்கம் தீர்மானித்துள்ளது.