இந்தியாவின் சனத்தொகை 32 வீதத்தால் குறையும்!

இந்தியாவின் சனத்தொகை 32 வீதத்தால் குறையும்!

இந்தியாவின் மக்கள் தொகை 2048இல்  160 கோடியாக உயரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த சனத்தொகை அளவு 2100 ஆவது ஆண்டாகும்போது குறைவடையக்கூடும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் ஆய்வாளர்கள் வொசிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சி தகவல்கள் மற்றும் இந்தியா  அமெரிக்கா,  சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 183 நாடுகளுக்கான எதிர்கால உலகளாவிய,  பிராந்திய மற்றும் தேசிய மக்கள்தொகை, அவற்றின் இறப்பு,  கருவுறுதல் மற்றும் இடம்பெயர்வு விகிதங்களின் மாதிரிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி  இந்தியாவின் மக்கள் தொகை 2048-ல் 160 கோடியாக உயரும் அதேவேளையில் 2100-ல் 32 சதவீதம் குறைந்து 109 கோடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த  2017-ல் இந்தியாவில் வேலைக்கு தகுதியான வயதுடைய நபர்கள் 76.2 கோடியாக இருந்த நிலையில்,  2100-ல்  57.8 கோடியாக குறையும் எனவும், சீனாவில் 2017-ல் 95 கோடியாக இருந்த நிலையில்  2100-ல் 35.7 கோடியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.