போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முற்பட்ட நபர் கைது
போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸ் நோக்கிப் பயணிக்க முயற்சித்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதான வெளிநாட்டவர் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பி சென்றவேளை கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் மீள கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் இருந்து தப்பி சென்ற குறித்த வெளிநாட்டவர், வெளியேறும் பகுதியில் உள்ள கூரைமீது ஏறி மறைந்திருந்ததாக அங்கிருந்த எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து அவரை கைது செய்வதற்காக இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
சுமார் ஒரு மணிநேர தேடுதலின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
கைதானவரின் கழுத்துப் பகுதியில் 4693 என்ற இலக்கம் பச்சை குத்தப்பட்டிருந்தது.
இன்று அதிகாலை 2.45 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.