சர்வதேச வர்த்தக சந்தைக்கு ஏற்றவாறு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் – பிரதமர்

சர்வதேச வர்த்தக சந்தைக்கு ஏற்றவாறு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் – பிரதமர்

உலக அளவில் பெரிய போட்டி நிலவுகிறது, சர்வதேச வர்த்தக சந்தைக்கு ஏற்றவாறு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலக இளைஞர்கள் திறன் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உலக அளவில் பெரிய போட்டி நிலவுகிறது. அதில், கொரோனா காலத்தில் சந்தை நிலவரம் வேகமாக மாறி வருகிறது. திறனை வளர்த்துக்கொள்வது மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும்.

திறன் மட்டுமே நம்முடைய வலிமை. ஆபத்து காலத்தில் திறன் மட்டுமே உதவும். கொரோனா தற்போது நமது வேலை செய்யும் முறையை மாற்றியுள்ளது. இதுதான் இனி வேலை செய்யும் முறையாக இருக்க போகிறது. புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி நாம் திறன்களை பெருக்கிக்கொள்ள வேண்டும் .

திறனை வளர்த்துக்கொள்ள அனுபவமும் நமக்கு வளரும். திறனுக்கும் வயதிற்கும் நேரத்திற்கும் தொடர்பு இல்லை. திறன் என்பது தனித்துவம் வாய்ந்தது. திறன் அதிகரிக்கவே செய்யும். நம்முடைய திறனை யாராலும் அபகரிக்க முடியாது.

மேலும் மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.