இலங்கையில் தொடரும் எரிவாயு வெடிப்பு: தடுக்கும் வழிகள் என்ன? பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்?

இலங்கையில் தொடரும் எரிவாயு வெடிப்பு: தடுக்கும் வழிகள் என்ன? பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்?

இலங்கையில் சமீபகாலமாகவே எரிவாயு கொள்கலன் வெடிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இதனை தடுக்க நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிக முக்கியமாக, 

பெரும்பாலான வீடுகளில் இரவு சமையல் முடித்து Regulator-யை ஆஃப் செய்யாமல் தூங்கி விடுகின்றனர். எழுபது சதவிகித சிலிண்டர் விபத்துகள் இரவில் ரெகுலேட்டரை அணைத்து வைக்காததால் ஏற்படுகின்றன.

ரெகுலேட்டரிலிருந்து அடுப்புக்குச் செல்லும் ரப்பர் டியூப் நைந்து போயிருந்தாலோ, ரப்பர் டியூப் அடுப்பிலோ அல்லது ரெகுலேட்டரிலோ சரியாகப் பொருத்தப்படாதபோது கசிவு ஏற்படலாம்.

சிலிண்டர் வால்வின் உட்புறம் உள்ள வாஷரின் உடைப்பு அல்லது வாஷரே இல்லாமல் இருத்தல் ஆகியவற்றால் சிலிண்டரின் வால்வில் இருந்து ஏற்படும் வாயுக் கசிவால் விபத்து ஏற்படலாம்.

பால் பொங்கியோ, பருப்பு பொங்கியோ, ஜன்னல் காற்றினாலோ அடுப்பு அணைந்து அதைக் கவனிக்காமல் விட்டு உறங்கிவிடுவதோ அல்லது அடுப்பு அணைந்து விட்டதே என்று உடனடியாக பற்ற வைப்பதோ விபத்து நிகழக் காரணமாகிறது.

சமையலறை அருகிலேயே பூஜையறையும் சேர்ந்தே இருக்கும் வீடுகளில் விளக்கேற்றுவது அல்லது ஊதுவத்தி கொளுத்துவது போன்றவற்றைச் செய்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே போய்விடுவார்கள். இந்த மாதிரியான நேரங்களில் சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆனாலும் விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறது.

சிலர் ஃப்ரிஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற மின்னணு சாதனங்களை சமையலறையிலேயே வைத்திருப்பார்கள். சிலிண்டர் லீக் ஆகும் நேரத்தில் இவற்றுக்கு மின்சாரம் வரும் ஸ்விட்ச் போர்டில் இருந்து சின்ன ஸ்பார்க் வந்தாலும் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும். 

தடுக்க என்ன செய்யலாம்?

சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்போது சிலிண்டரை முறைப்படி இணைத்து எரிவாயுக் கசிவு பரிசோதனைகள் செய்ய கேட்டுக் கொள்வது அவசியம்.

ஒருவேளை அடுப்பில் பொருத்தப்பட்டிருக்கும் சிலிண்டர் தீராத நிலையில் இருந்தாலும் டெலிவரி செய்யும் நபரைக் கொண்டு புதிய சிலிண்டரைப் பரிசோதித்து கழற்றிப் பாதுகாப்பாக வைத்துவிட்டு, பின்னர் பழைய சிலிண்டரை மாட்டிய பின் முழுமையான சோதனை செய்துவிட்டுச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ள வேண்டும். இதனை உறுதியாகச் செய்வது மிக அவசியம்.

சமையல் எரிவாயு, காற்றைவிட கனமானதாக உள்ளதால் கசிவு ஏற்பட்டால் தரைத்தளத்தில்தான் (Floor Level) பரவும் (சமையலறை புகைபோல் மேல் நோக்கிப் பரவாது). எனவே சமையல் அறைக்குள் சிலிண்டர் வைக்கப்பட்டுள்ள மேடை அடியின் தரைத்தளத்தில் பிரத்யேகமான தரைத்தள வாயுக் கசிவு வெளியேற்றும் அமைப்பைப் பொருத்தி வைக்கலாம்.

ஒவ்வொருமுறை சமையல் முடித்ததும் அடுப்பின் குமிழ்களை அணைத்து வைப்பதுடன், ரெகுலேட்டரையும் அணைத்து வைக்க வேண்டியது அவசியம். இரவில் ரெகுலேட்டரை கண்டிப்பாக அணைத்து வைக்க வேண்டும்.

எரிவாயு கசிவு ஏற்பட்டிருப்பது தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?

எரிவாயுக் கசிவு ஏற்பட்டதாக தெரிந்தவுடன் சிலிண்டரின் மீது உள்ள ரெகுலேட்டரைக் கழற்றி மிக வேகமாக சிலிண்டரின் மேல் பகுதியில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள வெள்ளை நிற பிளாஸ்டிக் மூடியை வால்வின் மீது பொருத்த வேண்டும்.

இதைச் செய்யும்போது முகத்தை சிலிண்டரின் வால்வில் ஹோஸ் மேல் இல்லாமல் முடிந்த அளவு தள்ளி வைத்துக் கொண்டு செய்யவும்.

ஒருவேளை பதற்றத்தில் இதைச் செய்ய முடியாது எனத் தோன்றினால் அடுப்பை ஒருவரும் சிலிண்டரை ஒருவரும் சிலிண்டர் மீது உள்ள ரெகுலேட்டரை நன்கு அழுத்திப் பிடித்துக் கொண்டு, சிலிண்டர், ரெகுலேட்டர், ரப்பர் டியூப், அடுப்பு ஆகியவற்றை சமையல் அறையில் காற்றோட்டமான இடத்திற்குக் கடத்தலாம்.

ஆனால் அதுவும் சிரமமானதாக இருக்கும் போது சமையலறையின் ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்துவிட்டு மிக வேகமாக அறையை விட்டுப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும்.

வால்வு கசிவின்போது மேற்கொள்ள வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் கையாள்வதுடன் உடனே சம்பந்தப்பட்ட விநியோகஸ்தரின் (Emergency Service) அவசர எண்ணிற்குத் தகவல் தெரிவித்து விடுவது நல்லது.