பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்: வெளியான வர்த்தமானி

பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்: வெளியான வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மருத்துவமனைகள், பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களில் நோயாளர்களைப் பராமரித்தல், அனுமதித்தல், பாதுகாத்தல், உணவளித்தல் மற்றும் சிகிச்சையளித்தல் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்: வெளியான வர்த்தமானி | Electricity Supply An Essential Service Anura Said

நோயாளர் காவு வண்டி சேவைகள், பயணிகள் அல்லது பொருட்கள் போக்குவரத்துக்கான பொது போக்குவரத்து சேவைகள், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புடன் தொடர்புடைய அனைத்து சேவைகள். உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான சேவைகள், அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் களமட்ட அதிகாரிகளால் ஆற்றப்பட வேண்டிய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் நீர் வழங்கல், மின்சாரம், கழிவுநீர் அகற்றும் முறைமை, தீயணைப்பு, கழிவு சுத்திகரிப்பு மற்றும் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.