மனைவி மீது சந்தேகம்: 17 ஆண்டுகளாக கணவர் செய்த முகம் சுளிக்க வைக்கும் செயல்
மனைவி மீது சந்தேகம் அடைந்து கடந்த 17 ஆண்டுகளாக அவ்வப்போது பீரோவில் ஒளிந்து மனைவியை வேவு பார்த்த கணவர் ஒருவர் குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ஒரு காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வருட காலம் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்த நிலையில் பின்னர் மனைவியின் மீது அந்த நபருக்கு சந்தேகம் வரத் தொடங்கியது.
இதனால் அவர் வேலைக்கு செல்வது போல சென்றுவிட்டு மனைவிக்கு தெரியாமல் வீட்டுக்குள் வந்து பீரோவில் ஒளிந்திருந்து மனைவியை வேவு பார்த்து வந்துள்ளார். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, 17 வருடங்களாக அவ்வப்போது அவர் வேலைக்கு மட்டம் போட்டு விட்டு பீரோவில் ஒளிந்து இருந்து வேவு பார்த்ததாக தெரிகிறது. ஆனால் மனைவி நடத்தையில் எந்தவித குற்றத்தையும் அவரால் நிரூபிக்கவில்லை.
இந்த நிலையில் ஒரு நாள் தன்னை தனது கணவர் வேவு பார்ப்பதை கண்டுபிடித்துவிட்ட மனைவி, காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் தனது கணவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார். இதனையடுத்து அவருக்கு மனநிலை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் சிகிச்சைக்கு பின் அவர் இயல்பு நிலை திரும்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இடையில் சிகிச்சையை நிறுத்தியதால் மீண்டும் அவர் பீரோவில் ஒளிந்து வேவு பார்க்கும் வேலையை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வீட்டுக்கு வரும் பால்காரன், பேப்பர்காரன் என அனைவரிடத்திலும் அவர் சண்டை போடவும் ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் தனது கணவரின் மனநிலை முற்றிவிட்டதாகவும், தனது கணவர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அந்தப் பெண் போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.