இன்று தீபாவளி பண்டிகை!

இன்று தீபாவளி பண்டிகை!

தமது அடியார்களான மக்களைக் காப்பதற்காக நரகாசுரன் வதம் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் தீபாவளி திருநாளை உலகளாவிய ரீதியில் இந்துக்கள் இன்று (04) கொண்டாடுகின்றனர்.

தீபாவளி திருநாளில் ஆலயங்களிலும், வீடுகளிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி தீப ஒளியைப் பரவச் செய்து இந்துக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவர்.

தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களைக் கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது என்கின்றன இந்துப் புராணங்கள்.

திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்றபோது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன் எனப்படுகின்றான்.

அசுர வதத்தின்போது பிறந்தவன் என்பதால் நரகாசுரன் துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால், அவனை மகாவிஷ்ணு அழிக்க நினைக்கிறார்.

எனினும், அவன் தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான்.

நரகாசுரன் மகா விஷ்ணுவுடன் போரிட்டபோது, அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான்.

இந்த அம்பு பட்டு மயக்கம் அடைவது போல் மகா விஷ்ணு பூமியில் வீழ்ந்தார்

இதைக் கவனித்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனைப் போருக்கு அழைத்தார்.

சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தான்.

அன்னையின் அம்புக்குப் பலியாகிச் சரிந்தான்.

அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரியவந்தது.

அவரிடம் அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும் என நரகாசுரன் கோரினான்.

அவ்வாறு நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாளே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.