ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் பாரிய தாக்குதல்
ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு இன்று (01.03.2026) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் மேலும் 58 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூவராவர்.
அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி வந்த ஈரானிய ட்ரோன்கள் தரையில் விழுந்து வெடித்ததாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி 165 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதுடன், அவற்றில் 152 ஏவுகணைகளைப் பாதுகாப்புத் தரப்பினர் வானிலேயே அழித்து வெற்றி கண்டுள்ளனர்.
எஞ்சிய 13 ஏவுகணைகள் கடலில் விழுந்துள்ளன. இதற்கு மேலதிகமாக, இரண்டு குரூஸ் ஏவுகணைகளும் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் ஒட்டுமொத்தமாக 541 ட்ரோன்களைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தியுள்ளதுடன், அவற்றில் 506 ட்ரோன்கள் இடைநடுவிலேயே வீழ்த்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், 35 ட்ரோன்கள் அமீரகத்தின் நிலப்பரப்பிற்குள் விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்தப் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை உச்சக்கட்ட நிலையில் செயற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.