ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு ஸ்டாலின் கோரிக்கை!

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு ஸ்டாலின் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான முடிவுகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடனடியாக நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கையாக பொருளாதார இழப்பை சமாளிக்கும் வகையில் மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கத் தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும்,  பொருட்களை கொண்டுசெல்வதற்கும்,  மக்கள் நடமாடுவதற்கும் சில தளர்வுகளுக்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறு, குறு,  நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய,  மாநில அரசுகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ள அவர்,  ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணி நாட்களை  ஆண்டுக்கு 250 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா நெருக்கடி தீரும் வரை  ஜி.எஸ்.டி வரியிலிருந்து மாநிலங்கள் விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும்,  தொலைநோக்கு நடவடிக்கையாக  அனைவரையும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதுடன்  தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளையும் இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் குறித்த அறிக்கையின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.