திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் மற்றும் 10 நர்சுகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு தொடர்ச்சியாக பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று மேலும் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர், 10 நர்சுகள், 2 தொழில்நுட்ப உதவியாளர்கள், 7 துப்புரவு பணியாளர்கள் ஆகியோரும் அடங்குவர்.
ஒரே மருத்துவமனையில் 20 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர மாவட்டத்தில் 2 குழந்தைகள் உள்பட மேலும் 20 பேருக்கு தொற்றுகண்டறியப்பட்டது.
இதற்கிடையே மாவட்டத்தில் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், கொரோனா பாதித்த பகுதிகளை சேர்ந்தவர்கள், சளி-காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று பழனி பகுதியில் 106 பேர், நத்தத்தில் 63 பேர், ஒட்டன்சத்திரத்தில் 55 பேர், நிலக்கோட்டையில் 34 பேர், தொப்பம்பட்டியில் 30 பேர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 591 பேரிடம் ரத்தம், சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.
இவை அனைத்தும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.