கொவிட்-19 தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றிபெற்றது ரஷ்யா!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு மருந்தினை மனிதர்கள் மீது செலுத்தி, சோதனை நடத்தி அதில் வெற்றிபெற்றுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளன.
இந்தநிலையில் சோதனை நடவடிக்கையில் ஜேர்மனி, அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்காக குறித்த நாடுகள் பல பில்லியன் டொலர் கணக்கான தொகையினையும் செலவு செய்துள்ளது. இந்த நிலையில் இந்த முயற்சியில் ரஷ்யா வெற்றி கண்டுள்ளதாக சொசோனோவ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றிபெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 18ஆம் திகதி இதற்கான சோதனை தொடங்கப்பட்டதாகவும், இவை வெற்றிபெற்றதால் முதல் குழுவினர் நாளை மறுநாளும், இரண்டாம் குழுவினர் 20ஆம் திகதியும் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள Gamalei Institute of Epidemiology and Microbiology என்ற நிறுவனம் தயரித்துள்ளது. இந்த மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
பல நாடுகளில் முதல்கட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அனைத்தும் சோதனையில் உள்ளன. ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் பலக்கட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.