மாலிங்க உலகக் கிண்ணப் போட்டியில் கலந்துக்கொள்வது சிறந்தது - அமைச்சர் நாமல்

மாலிங்க உலகக் கிண்ணப் போட்டியில் கலந்துக்கொள்வது சிறந்தது - அமைச்சர் நாமல்

எதிர்வரும் மாதங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைம்பெறவுள்ள இருபது20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி லசித் மாலிங்க இணைந்துகொள்வாராயின் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் நான் மகிழச்சியடைவேன் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் கருத்துதெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், லசித் மாலிங் இலங்கை கிரிக்கெட்டுக்காக மிகவும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

எனினும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவின் திட்டத்துக்கமைய, இந்த குழாம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில், அந்த தேர்வு நடவடிக்கைகளில் தலையிடவோ, அழுத்தம் கொடுக்கவோ இல்லை என அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் விளையாட்டு துறை அமைச்சர்கள் விட்ட தவறுகளின் விளைவே இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கும், தோல்விக்கும் அடிப்படை காரணியாக அமைந்ததாகவும், அந்த வரிசையில் தான் இணைந்துகொள்ள தனக்கு எந்த எண்ணமும் இல்லையென்றும், அமைச்சர் நாமல் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உலகக்கிண்ண இருபது20 கிரிக்கெட் போட்டிகளில் இணைந்துகொள்ளவுள்ள இலங்கை குழாம் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று நேற்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் இடம்பெற்றது.

இதில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள், தேசிய கிரிக்கெட் தெரிவுக்கு உறுப்பினர்கள் மற்றும் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகியோரும் இணைந்துகொண்டனர்.

இதன்போது, உலகக் கிண்ண குழாமில் பெயரிடப்பட்டுள்ள நிலையில், உபாதைக்கு உள்ளான லஹிரு மதுஷங்கவுக்கு பதிலீடு செய்யக்கூடிய வீரர் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட அதேவேளை, உபாதைக்குள்ளாகியுள்ள விக்கெட் காப்பாளர் குசல் ஜனித் பெரேராவின் உடல் நிலை தொடர்பில் ஆராயப்பட்டது.

அதன்போது, உலகக்கிண்ணப் போட்டிகளில் முதலாவது குழாம் வீரர்களுக்கு மேலதிகமாக மேலும் 3 அல்லது 4 வீரர்களை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்ட அதேவேளை, குறித்த வீரர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு மேலதிகமாக அணியில் இணைத்துக்கொள்ளப்படும் வீரர்களுக்கான செலவினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஏற்றுக்கொள்ளும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.