நூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்டப்போது அதிகளவு உயிரிழப்புகளை எதிர்கொண்டோம் – மோடி
இந்தியாவில் நூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்டப்போது அதிகளவில் உயிரிழப்புகளை எதிர்கொண்டதாகவும், அவற்றுடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் உள்ள தொண்டு நிறுவனங்களின் பிரநிதிநிதிகளுடன் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நூறாண்டுக்கு முன் இதேபோலப் பெருந்தொற்று ஏற்பட்டபோது அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று .
இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனப் பலரும் அஞ்சினர். மக்களின் ஒத்துழைப்புடன் இந்த அச்சம் வெற்றிக்கொள்ளப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தைப் போல் மக்கள் தொகை கொண்ட பிரேசிலில் கொரோனாவால் 65 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 800 பேர் தான் உயிரிழந்துள்ளனர். ஏராளமான உயிர்கள் காக்கப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.