விஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன – அகில இலங்கை சைவ மகா சபை
திருக்கோணேச்சரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் என்பன தொடர்பாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சைவத்தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளன அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது.
அத்தோடு இலங்கைக்கு பௌத்த சமயம் கொண்டுவரப்படும் முன்னரே இங்கு சிவ வழிபாடு இருந்தது என்பதையும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இலங்கையில் குடியேறி சிங்கள இனத்தை தோற்றுவித்த விஜயன் வருகையின் போதே திருக்கோணேச்சரம் உள்ளிட்ட பஞ்ச ஈச்சரங்கள் இங்கு இருந்ததாகவும் அங்கு சென்று விஜயன் வழிபட்டதாகவும் மகாவம்சமே ஒப்புக்கொள்கின்றது என்பதையும் சைவ மகா சபை வெளிப்படுத்தியுள்ளது.
மூத்த சிவனின் மகனாகிய தேவநம்பியதீசன் கி.மு 243 இல் பௌத்த மதத்திற்கு மதம் மாறும் வரை இலங்கை முழுவதும் சைவ சமயமே பின்பற்றபட்டது என்ற வரலாற்று உண்மையை எல்லாவெல மேதானந்த தேரர் மனங்கொள்வது நல்லது எனவும் சைவ மகா சபை தெரிவித்துள்ளது.
கிழக்கு தொல்லியல் செயலணிக்கு நியமிக்கப்பட்ட மேதானந்த தேரர் சமீப காலமாக சைவ ஆலயங்கள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலிறுக்கும் வகையில் அகில இலங்கை சைவ மகா சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.