திருகோணமலையை எவருக்கும் தாரைவார்க்க வேமாட்டோம்! மேதானந்த தேரருக்கு சம்பந்தன் பதிலடி

திருகோணமலையை எவருக்கும் தாரைவார்க்க வேமாட்டோம்! மேதானந்த தேரருக்கு சம்பந்தன் பதிலடி

“தமிழர்களின் தலைநகரான திருகோணமலையையும், இங்குள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயத்தையும் எவருக்கும் தாரைவார்க்கவேமாட்டோம்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“திருக்கோணேஸ்வரம் இந்துக்களின் புனித தலம் - இலங்கையில் தேவாரப் பாடல் பெற்ற தலம். இதற்குப் பௌத்த மதத்தவர்கள் உரிமை கோர முடியாது" எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

திருக்கோணேஸ்வரம் கோயில் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது. இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்டமாட்டோம்.

ஆனால், அந்தப் பகுதியில் பௌத்தர்களுக்குரிய தொல்பொருள்கள் இருந்தால் அவை பாதுகாக்கப்பட வேண்டும்' என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“திருக்கோணேஸ்வரம் கோயில் அல்ல. அது கோகண்ண விகாரை என்று எல்லாவல மேதானந்த தேரர் கூறும் கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம்.

தொல்பொருள்களைப் பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் தமிழர்களின் பூர்வீக இடங்களினதும் இந்துக்களின் புனித தலங்களினதும் வரலாற்றை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலணி முன்னெடுக்க முடியாது. அதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கவேமாட்டோம்.

இனவாத - மதவாதப் போக்கில் ஜனாதிபதி செயலணி செயற்பட்டால் அது நாட்டுக்குத்தான் பாதக விளைவுகளை ஏற்படுத்தும்" - என்றார்.

திருக்கோணேஸ்வரத்தின் வரலாறும் மகிமையும்

இலங்கையிலுள்ள ஐந்து ஈஸ்வர ஆலயங்களில் ஒன்றாகவும், இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகவும் திருக்கோணேஸ்வரம் விளங்குகின்றது.

இந்தப் புனித தலத்தின் மீது திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப் பெற்றுள்ளது. அருணகிரிநாதரும் இந்தத் தலத்தின் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

இந்த ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது. இத்தலத்தில், இறைவன் கோணேஸ்வரரும், இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர்.

இந்தக் கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப்படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது. தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டளவில் கட்டினார் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

கி.பி. 1624ஆம் ஆண்டில் இந்தக் கோயிலை போர்த்துக்கேயர் அழித்தார்கள் என்றும் வரலாறு உண்டு.

ஆங்கிலேயர்களிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு 1952ஆம் திருகோணமலையிலுள்ள பெரியார்களால் இந்த ஆலயம் மீளக்கட்டுவிக்கப்பட்டது.

இந்த ஆலயத்தில் ஆகம முறைப்படி பூஜைகள் இடம்பெறுகின்றன. வருடாந்த மகோற்சவம் பங்குனி உத்தரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது.

இந்த ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.