இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பம்? இன்று அடையாளம் காணப்பட்ட பெண் தொடர்பான தகவல்

இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பம்? இன்று அடையாளம் காணப்பட்ட பெண் தொடர்பான தகவல்

இலங்கையில் இன்று அடையாளம் காணப்பட்ட பெண் கொரோனா நோயாளி தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

கொரோனா தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு நிலைய ஆலோசகர், கடந்த 3ஆம் திகதி விடுமுறை பெற்று நாத்தண்டிய, கொட்டராமுல்ல பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

மாரவில வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதுவரையில் அவருக்கு நெருக்கமாக செயற்பட்டவர்களை அடையாளப்படுத்தி தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர் தினுஷா குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர் திருமணமாகாத 27 வயதுடைய பெண் ஒருவராகும்.

 

அவர் கடந்த 3ஆம் திகதி விடுமுறை பெற்று நாத்தன்டிய, கொட்டாரமுல்ல பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்பட்டுள்ளன. பின்னர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வைத்திய நிலையத்திற்கு சிகிச்சைக்காக அவர் சென்றுள்ளார்.

வைத்திய சிகிச்சைகளின் பின்னர் அவரது கொரோனா அறிகுறிகள் மறைந்துள்ளன. எனினும் அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவை செய்துவிட்டு வீடு திரும்பியவர் என்பதால் அவர் தொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்து பார்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென தினுஷா குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் குறித்த பெண்ணை பீசீஆர் பரிசோதனைகுட்படுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

இதேவேளை, குறித்த பெண் விடுமுறை பெற்று வீட்டிற்கு வந்திருந்த நிலையில் பொது போக்குவரத்தினை பயன்படுத்தியுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சொந்தமான கெப் வண்டியில் பொலநறுவைக்கு வருகைத்தந்து அங்கிருந்து பேருந்தில் குருணாகலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் குருணாகலை - நீர்கொழும்பு பேருந்தில் தங்கொட்டுவைக்கு சென்றுள்ளார். தங்கொட்டுவையில் இருந்து மீண்டும் பேருந்தில் ஏறி நாத்தண்டிய சென்றுள்ளார்.

எனினும் அவர் முக கவசம் அணிந்தே இந்த பேருந்துகளில் பயணித்துள்ளார். இந்த பெண்ணிடம் இருந்து சமூகத்திற்குள் கொரோனா பரவுவதனை தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் மூலம் சமூகத்திற்குள் கொரோனா பரவியிருக்க வாய்ப்புகள் உள்ளதாக வைத்தியர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.