அம்பிட்டிய பகுதி கடத்தல் சம்பவம் : கைதான மூவரும் இன்று நீதிமன்றில் முன்னிலை

அம்பிட்டிய பகுதி கடத்தல் சம்பவம் : கைதான மூவரும் இன்று நீதிமன்றில் முன்னிலை

கண்டி - பலகொல்ல, அம்பிட்டிய பகுதியில் பேஸ்புக் பதிவு ஒன்று தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பேரை கடத்திச் சென்று மனிதாபிமானமற்ற வகையில் துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் அம்பிட்டிய பகுதியில் கைதான 3 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அம்பிட்டிய - தலுக்கோல்ல மற்றும் கண்டி - ரஜபிஹில்ல மாவத்தை ஆகிய பகுதிகளில் வைத்து குறித்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து 9210 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் ஆயுதங்கள் என்பன மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சிற்றுந்தின் சாரதி நேற்றைய தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்படி அவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்ட சிற்றுந்தில் படிந்திருந்த குருதியின் மாதிரி மரபணு பரிசோதனைக்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பபட்டுள்ளது.

கண்டி - பலகொல்ல - கெங்காலை பகுதியில் உள்ள வாகன திருத்தும் நிலையம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சிற்றுந்து கடந்த 27 ஆம் திகதி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
இதன்படி, ஏனைய சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்வதற்காக பொறுப்பேற்கப்பட்ட சிற்றுந்தின் கதவுகளில் படிந்துள்ள கைவிரல் அடையாளங்களை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அனுப்பியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.