திடீரென உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!
இலங்கையில் என்றுமில்லாத அளவுக்கு தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. கொழும்பு தங்க விற்பனை சந்தையின் நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயாகும். 22 கரட் ஒரு பவுண் தங்கம் 88 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 800 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளமையே இலங்கையிலும் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பின்னரே தங்கத்தின் விலை தற்போது இந்த அளவுக்கு அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனடிப்படையில் கடந்த 14 மாதங்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலை 40 வீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள பின்னணியில் முதலீட்டாளர்கள் தங்கத்தை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளதால், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.