கருணாவின் விவகாரம் கிரிகெட் சூதாட்டம் என்பவற்றை வைத்து கோட்டாபய-மஹிந்த அரசாங்கம் போலிப்பிரசாரங்களில்!

கருணாவின் விவகாரம் கிரிகெட் சூதாட்டம் என்பவற்றை வைத்து கோட்டாபய-மஹிந்த அரசாங்கம் போலிப்பிரசாரங்களில்!

நாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளை மூடிமறைக்கவும், மக்களைத் திசைதிருப்பவுமே கருணான் பேச்சு மற்றும் கிரிக்கெட் சூதாட்டம் போன்ற போலிப்பிரசாரங்களை கோட்டாபய-மஹிந்த அரசாங்கம் செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஆளும் தரப்பினர் அரச இயந்திரத்தை பயன்படுத்தி தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் கவனம் செலுத்துவதுடன் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மாவட்ட வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் கலந்துகொண்ட போதே இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் பிரசார காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற வில்லை. இதனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக வாக்களித்த மக்கள் இன்று இவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விரக்தி அடைந்துள்ளனர்.

இதனால் ஜனாதிபதி தேர்தலில் இவர்களுக்கு கிடைக்கப் பெற்ற வாக்குகளில் 10 இலட்சம் வாக்குகளை இம்முறை இழப்பார்கள் என்று புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. ஊடகங்கள் முன்னிலையில் வெறுமன கருத்து தெரிவிப்பதை விடுத்து அரசஇயந்திரத்தை பயன்படுத்தி ஆளும்தரப்பினர் முன்னெடுக்கும் சட்டமீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் இனவாதத்தை போஷித்தே ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொண்டது. இன்று அதனையே பொதுத் தேர்தலிலும் மேற்கொண்டு வருகின்றது. தான் சுயாதீன போட்டியாளர் என்று அத்துரலியே ரத்தனதேரர் கூறிக்கொண்டாலும், அவர் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகின்றார்.

இவ்வாறான கருத்துகளை கூறி, அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெறாத வாக்குகளை அவர் பெற்று அரசாங்கத்திற்கு பலத்தை பெற்றுக் கொடுக்கவே முயற்சிக்கின்றார். நாட்டில் யுத்தமொன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது அனைத்தின மக்களும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியிருந்தோம்.

தற்போது யுத்தம் முடிவுற்று அனைவரும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற நிலையில், ஒரு தேரர் என்ற வகையில் இவர் நாட்டில் ஐக்கியத்தையோ, நல்லிணக்கத்தையோ ஏற்படுத்தும் வகையில் எதுவும் கூறாது, இன பேதமான கருத்துகளை கூறி மீண்டும் நாட்டில் அழிவுகளை ஏற்படுத்தவா முயற்சிக்கின்றார்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.