நல்லாட்சி அரசாங்கமே நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு வழியேற்படுத்தியது – மஹிந்த
நல்லாட்சி அரசாங்கம் உளவுத்துறையை முடக்கி தகவல்களை மறைப்பதன் மூலம் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு வழி ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
குருநாகல் கடுகம்பளை பிரதேசத்தில் நேற்று ( புதன்கிழமை) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், ”பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டிருந்த போதிலும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு இடமளித்துள்ளது
நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களுக்கு தகவல் கிடைத்திருந்த போதிலும் உளவுத்துறை அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் கிடைத்த முன்கூட்டிய எச்சரிக்கையை மறைத்ததன் மூலம் அப்பாவி மக்கள் பலர் உயிரிழக்க நேரிட்டது.
மாவட்டமொன்றை அபிவிருத்தி செய்வதைவிட முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே எமது பொறுப்பு. குருநாகல் என்பது நான்கு இராஜ்ஜியங்கள் இருந்த மிகவும் பலம் வாய்ந்த மாவட்டமாகும். எமக்கு நாட்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறந்த புரிந்துணர்வு உள்ளது. ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நாடாளுமன்றமொன்று அவசியம். எப்பொழுதும் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியேஅரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.