குப்பை பிரச்சினைக்கு தலவாக்கலை லிந்துலை நகர சபையினால் தீர்வு

குப்பை பிரச்சினைக்கு தலவாக்கலை லிந்துலை நகர சபையினால் தீர்வு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சௌபாக்கிய நோக்கு செயல் திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய நுவரெலியா மாவட்டத்தில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு கண்டு அதனூடாக இரசாயன உரப் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தலவாக்கலை லிந்துல நகர சபையினால் பாரிய கழிவு முகாமைத்துவ நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நகர சபையின் மின் மயானப் பகுதியில் சுமார் ஒரு ஹெக்டயார் நிலப்பரப்பில் பொது மக்களின் பயன்பாட்டின் பின் அகற்றப்படும் கழிவுகளை முகாமைத்துவம் செய்து அதனூடாக சேதன பசளை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளில் மிக பாரிய பிரச்சினையாக இருப்பது கழிவுகளை முறையாக அகற்ற முடியாமை காரணமாக நகர மற்றும் பிரதேச சபைகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன.

இதனால் இந்த நகர சபைகளினதும் பிரதேச சபைகளினதும் சுற்றுப்புறம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

இதனால் நீர் நிலைகள் பொது இடங்கள் என அனைத்தும் அசுத்தமடைந்து வருகின்றன.

முறையாக கழிவுகளை சேகரிக்காமை காரணமாக பொது மக்கள் நடு வீதிகளில் குப்பைகளை வீசி எறிகின்றனர்.

இதனால் ஒரு சில இடங்களில் நடந்து கூட செல்ல முடியாத நிலையே காணப்படுகின்றன.

இவை அனைத்துக்கும் தீர்வு காணும் முகமாகவே இந்த கழிவு முகாமைத்துவ நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கழிவு முகாமைத்துவத்தின் மூலம் பிரதேசங்களில் சேகரிக்கப்படும் சகல விதமான கழிவுகளையும் மூலதனமாக மாற்றக்கூடியவாறு அமைக்கப்பட்டிருப்பது இதன் முக்கிய அம்சமாகும்.

பிரித்து ஒதுக்கப்பட்ட கழிவுகளை சேதன பசளை ஆக்குவதற்கும் பிளாஸ்டிக் பொருட்களை நைத்து பொதி செய்வதற்கும் சுமார் ஏழரை லட்சம் ரூபா செலவில் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்களினால் சூழலுக்கு ஏற்படும் தீங்கு குறைக்கப்படவுள்ளன.

இதே நேரம் இவ்வாறு மீள பயன்படுத்தப்பட முடியா கழிவு பொருட்களை எரியூட்டி அதனை சாம்பலாக்கி அதனை சேதன பசளைக் செய்வதற்காக சுமார் 111 லட்சம் ரூபா செலவில் மற்றுமொரு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி நிறுவனங்களில் உள்ள மலக்கழிவுகளை நீர் வடிகால் சபையின் கீழ் இயங்கும் ஒசிப் நிறுவனத்தின் சுமார் 63 மில்லியன் செலவில் நவீன தொழிநுட்பத்தின் ஊடாக சேகரித்து சேதன பசளை செய்யும் திட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த திட்டங்களின் ஊடாக தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் முன்னெடுக்கப்படும் சேதன பசளை வேலைத்திட்டத்திற்கு இது முன் உதாரணமாக அமையும் என்பதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும்.

இந்த திட்டத்தை நடைமுறை படுத்தும் போது சுமார் 15 பேருக்கு அதிமானவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுவதாகவும் இந்த செயத்திட்டத்தின் மூலம் எமது பிரதேசத்தில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு போதியளவு சேதன பசளைகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்று தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் லெச்சுமணன் பாரதிதாசன் தெரிவித்தார்.

தற்போது தலவாக்கலை பகுதியில் நாள் ஒன்றுக்கு 5 தொன் கழிவுகள் சேருவதாகவும் அதனை பயன்படுத்தி இரண்டு நாளைக்கு ஒரு தடைவை இரண்டு தொன் சேதன பசளை தயாரிப்பதாகவும் ஏனைய உள்ளுராட்சி கழிவுகளை பெற்று நாள் ஒன்றுக்கு 10 தொன் சேதன பசளையை தயாரிக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும், இந்த திட்டத்தின் மூலம் பாரிய நிதியினை சேமித்து நாட்டின் அபிவிருத்திற்கு உதவுவதே நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளுராட்சி நிறுவனங்களினால் வழங்கப்படும் ஒரு தொன் கழிவுக்காக 2,500 ரூபா அறவிடப்படவுள்ளதுடன் 10 கிலோ கிராம் சேதன பசளை 350 ரூபாவுக்கு விற்பனை செய்யும் திட்டமிடப்பட்டுள்ளன.
கடந்த 2020 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த கழிவு முகாமைத்துவ செயத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.