பொருளாதார மீளுருவாக்கம்: மத்திய வங்கி வழங்கும் சலுகை!
இலங்கை மத்திய வங்கி, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வழங்கல் வீதம் ஆகியவற்றைக் குறைக்க முடிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் கூட்டம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தலா 100 அடிப்படைப் புள்ளிகள் மூலம் நிலையான வைப்பு வசதி 4.50 சதவீதமாகவும் மற்றும் கடன் வழங்கல் வீதம் 5.50 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார தொய்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்கம் 2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கடுமையாக ஏற்பட்டுள்ளது.
எனவே, பொருளாதார மீளுருவாக்கம் எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆண்டின் இரண்டாம் பாதியில் நாணய மற்றும் நிதி ஊக்க நடவடிக்கைகளின் ஆதரவுடன், வளர்ச்சியை ஊக்குவித்தல், நம்பிக்கையை மேம்படுத்துதல், பொருளாதார கட்டமைப்பை உயர்த்துவது கட்டாயமாகின்றது.
இதனால், நிதி ஊக்க நடவடிக்கையாக பொருளாதாரத்தின் உற்பத்தித் துறைகளுக்கு கடன் வழங்குவதை மேம்படுத்துவதற்கு ஏதுவாக இந்த திட்டம் அமையும் என மத்திய வங்கி கருதுகின்றது.