கொரோனா வைரஸ் : சென்னைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மத்திய குழுவினருடன் விஜயபாஸ்கர் ஆலோசனை!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சென்னை வந்துள்ள மத்திய குழுவினருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மூன்று நாள் விஜயமாக வருகைத் தந்துள்ள குறித்த குழுவினர் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் நோய் கட்டுப்பாட்டு பகுதி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் குறித்த குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர்.
தொடர்ச்சியாக நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள சிறப்பு மையம், புளியந்தோப்பு பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்யவுள்ளதுடன், எழும்பூர் மருத்துவ அலுவலகத்தில் மருந்துகள் இருப்பு குறித்து ஆலோசனை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.